dark_mode
Image
  • Thursday, 16 July 2026

விஜயபாஸ்கர் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

விஜயபாஸ்கர் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், அவரும் தேர்தல் ஆணையமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. விஜயபாஸ்கர், 1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், தேர்தல் முடிவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் 'ஃப்ரிட்ஜ்' வாங்குவதற்கான கூப்பன்கள் வழங்கி வாக்கு சேகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், விஜயபாஸ்கரின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி. விஜயபாஸ்கர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையில், சி. விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

related_post