பழனி மட நில விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி ஜூலை 25ல் அதிமுக போராட்டம்
பழனி: பழனி தண்டாயுதபாணி அறக்கட்டளைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் நிலம் முறைகேடாக தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ஜூலை 25 (சனிக்கிழமை) பழனியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள மட நிலம் தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிகாரிகள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சிபிசிஐடி விசாரணை மட்டும் போதாது என்றும், நடுநிலையான விசாரணைக்காக இந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நில பரிவர்த்தனையில் ஈடுபட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், கோயில் மற்றும் அறநிலையத் துறை சொத்துக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 25 காலை 9.30 மணிக்கு பழனி மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் நிர்வாகிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.