தவெக ஆதரவுடன் NDA ஆட்சி..?– மத்திய அமைச்சரின் கருத்து அரசியல் சர்ச்சை
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கிடைத்தால் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சரின் கருத்து அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
விஜய் தலைமையிலான தவெக, ஆரம்பத்திலிருந்தே தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்துக் கொண்டுள்ளது. மதச்சார்பற்ற தன்மையும் சமூக நீதி கொள்கைகளிலும் எந்தவித சமரசமும் இல்லை எனவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி, திமுக மற்றும் அதிமுக ஆகிய முக்கிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்க முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆனால், தவெக தரப்பில் இருந்து இதற்கு தெளிவான மறுப்பு வெளியாகியுள்ளது. கட்சியின் நிர்வாகிகள், பாஜகவை தங்களின் கருத்தியல் எதிரி என குறிப்பிட்டு, கூட்டணி குறித்த தகவல்கள் அனைத்தும் வதந்திகள் எனத் தெரிவித்துள்ளனர்.
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத் தயாராகி வரும் சூழலில், மத்திய அமைச்சரின் இந்த கருத்து தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், இது தவெக ஆதரவாளர்களிடையே குழப்பத்தையும் உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.