dark_mode
Image
  • Thursday, 16 July 2026

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை – ஜூலை 17 முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை – ஜூலை 17 முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு

தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்துள்ளதால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. இதையடுத்து வேலூர், மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, பூமத்திய ரேகையைத் தாண்டி வீசும் தென்மேற்கு காற்று பலவீனமடைந்ததும், அரபிக்கடலில் கீழ்மட்ட ஜெட் காற்றின் வலிமை குறைந்ததும், வளர்ந்து வரும் எல் நினோ தாக்கமும் பருவமழை பலவீனத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இதன் காரணமாக அரபிக்கடலிலிருந்து ஈரப்பதம் குறைந்து, தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் மழைப்பொழிவு கணிசமாக குறைந்துள்ளது. மேகமூட்டம் இல்லாததால் சூரியக் கதிர்வீச்சு அதிகரித்து, பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட உயர்ந்து பதிவாகி வருகிறது.

இந்நிலையில், ஜூலை 17 முதல் கீழ்மட்ட ஜெட் காற்று படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக கேரளம், கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை படிப்படியாக அதிகரித்து, வெப்பநிலையும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 19 மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 102°F (39°C) மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82°F (28°C) அளவில் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

related_post