dark_mode
Image
  • Monday, 11 May 2026

மன்னார் வளைகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

மன்னார் வளைகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

மன்னார் வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாகவும், இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் மே 11 முதல் மே 16 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்று (மே 11) ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே 12ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13 முதல் 16ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக இன்று முதல் மே 14ஆம் தேதி வரை குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.