எல் நினோ தீவிரம்: தென்கிழக்கு ஆசியாவுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'... இந்தியாவுக்கும் தாக்கம் ஏற்படுமா.?
2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எல்லைத் தாண்டிய புகைமூட்டப் பிரச்சினை (Transboundary Haze) கடுமையாக உருவாகும் அபாயம் இருப்பதால் 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
ஏசியான் சிறப்பு வானிலை மையத்தின் தகவலின்படி, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் எல் நினோ தீவிரமடைந்து வறண்ட காலநிலையை வழக்கத்தை விட நீட்டிக்கக்கூடும். அதேசமயம், இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole) சாதகமான நிலையை அடைய வாய்ப்புள்ளதால், வறட்சி அக்டோபர் வரை நீடித்து காடுகள் மற்றும் விவசாய நிலங்களில் தீ விபத்துகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2023-க்குப் பிறகு முதல் முறையாக 2026-இல் இந்த அளவிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எல் நினோ 'சூப்பர் எல் நினோ'வாக மாறும் அபாயமும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அப்படி ஏற்பட்டால் அதன் தாக்கம் 2027 வரை நீடிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்புகள்
வெப்பநிலை உச்சம்:
உலகளவில் சராசரி வெப்பநிலை அதிகரித்து, பல நாடுகளில் கடுமையான வெப்ப அலைகள் ஏற்படலாம். இந்தியாவின் பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலையும் பதிவாக வாய்ப்புள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை:
வறட்சியால் அணைகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் நெருக்கடி தீவிரமடையலாம்.
வறட்சியும் வெள்ளமும்:
ஒருபுறம் கடுமையான வறட்சி நிலவினாலும், சில பகுதிகளில் குறுகிய காலத்தில் அதீத மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
பருவமழை மாற்றம்:
இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை பாதிக்கப்பட்டு, சில பகுதிகளில் மழைப்பற்றாக்குறையும், சில இடங்களில் திடீர் கனமழையும் உருவாகலாம்.
உயிரிழப்பு அபாயம்:
வெப்ப அலைகளால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வெளிப்புறத் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படலாம். வெப்பத் தாக்கத்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும்.
2015 அனுபவம் மீண்டும் வருமா.?
கடந்த 2015-ஆம் ஆண்டு உருவான சக்திவாய்ந்த சூப்பர் எல் நினோவின் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பெருவெள்ளத்தை சந்தித்தன. அதனைத் தொடர்ந்து 2016-இல் மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது. இதேபோன்ற சூழல் மீண்டும் உருவாகுமா என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது.
இதனால், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவது இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மிக முக்கியமான சவாலாக இருக்கும் என வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.