dark_mode
Image
  • Wednesday, 29 April 2026

தமிழகத்தில் ஏப்ரல் 30 முதல் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை,சென்னையில் வெப்பம் தொடரும்.!

தமிழகத்தில் ஏப்ரல் 30 முதல் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை,சென்னையில் வெப்பம் தொடரும்.!

தமிழகத்தில் ஏப்ரல் 30 முதல் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… சென்னையில் வெப்பம் தொடரும்!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், ஏப்ரல் 30 முதல் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைக்குடா வரை, தென் உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருவதால், தமிழகத்தில் வானிலை மாற்றம் ஏற்பட உள்ளது.

இதன் தாக்கமாக, ஏப்ரல் 29-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக பகுதிகள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 மற்றும் மே 1-ஆம் தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மே 2-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கையுடன் சேர்த்து, வெப்பநிலையும் தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 29 முதல் மே 3 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியமான வானிலை நிலவ வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தால் அவதிப்படும் சென்னை மக்களுக்கு உடனடி நிவாரணம் இல்லையெனினும், வரும் நாட்களில் மழை வாய்ப்பு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.