dark_mode
Image
  • Sunday, 17 May 2026

சென்னையில் அரிய ‘கிளாண்டர்ஸ்’ தொற்று: பாதிக்கப்பட்ட குதிரை உயிரிழப்பு.. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சென்னையில் அரிய ‘கிளாண்டர்ஸ்’ தொற்று: பாதிக்கப்பட்ட குதிரை உயிரிழப்பு.. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சென்னையில் கிளாண்டர்ஸ் (Glanders) எனப்படும் அரிய வகை பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த குதிரை உயிரிழந்த சம்பவம் கால்நடை மருத்துவத் துறையிலும், குதிரை வளர்ப்போரிடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் அந்த குதிரைக்கு Burkholderia mallei என்ற பாக்டீரியாவால் ஏற்படும் கிளாண்டர்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த குதிரை இறந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகர்ப்புற பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கிளாண்டர்ஸ் என்பது பெரும்பாலும் குதிரை, கழுதை மற்றும் கோவேறுகழுதைகளை தாக்கும் ஆபத்தான தொற்று நோயாகும். இந்த நோய் பாதித்த விலங்குகளில் காய்ச்சல், மூக்கில் அடர்த்தியான சளி வடிதல், தோலில் புண்கள், சுவாச சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும். உலகின் பல நாடுகளில் இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக கருதப்பட்டாலும், இந்தியா, பாகிஸ்தான், சீனா, துருக்கி உள்ளிட்ட சில நாடுகளில் சமீப காலங்களில் மீண்டும் sporadic-ஆக பதிவாகி வருகிறது. இந்தியாவில் இது கட்டாயம் அதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டிய “Notifiable Animal Disease” பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளின் மூக்கு, கண், புண்களில் இருந்து வெளியேறும் திரவங்கள் மூலமாகவும், அவை பயன்படுத்திய தண்ணீர் வாளி, தீவன பாத்திரங்கள், கயிறு மற்றும் சேணம் போன்ற பொருட்கள் மூலமாகவும் பரவக்கூடும். மனிதர்களுக்கும் இந்த நோய் பரவ வாய்ப்பு இருப்பதால் இது zoonotic disease ஆக வகைப்படுத்தப்படுகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு இல்லாத பொதுமக்களுக்கு எளிதில் பரவும் அபாயம் குறைவாகவே இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளாண்டர்ஸ் நோய்க்கு இதுவரை முழுமையான சிகிச்சை அல்லது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இல்லாததால், நோய் உறுதி செய்யப்பட்ட விலங்குகளை தனிமைப்படுத்தி, பிற விலங்குகளுக்கு பரவாமல் தடுக்க கருணைக் கொலை செய்வதே பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறையாக உள்ளது.

சென்னையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குதிரை வைக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அந்த குதிரையுடன் தொடர்பில் இருந்த மற்ற குதிரைகளுக்கும் ரத்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மாநகர எல்லைக்குள் உள்ள குதிரை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. தங்களின் விலங்குகளில் ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

related_post