dark_mode
Image
  • Friday, 09 January 2026

மாநகராட்சி கமிஷனர் வீடு முற்றுகை; துாய்மை பணியாளர்கள் 400 பேர் கைது

மாநகராட்சி கமிஷனர் வீடு முற்றுகை; துாய்மை பணியாளர்கள் 400 பேர் கைது

சென்னை: மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வீட்டை, அடுத்தடுத்து முற்றுகையிட்ட துாய்மை பணியாளர்கள், 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை மாநகராட்சியில், குப்பை கையாளும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததை கண்டித்து, துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டத்தில் உள்ள, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் வீட்டை, 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

அவர்களை, பாதுகாப்புக்கு நின்ற 100க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தியதால், வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. துாய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, காலை 11:00 முதல் பகல் 1:00 மணி வரை துாய்மை பணியாளர்கள், அடுத்தடுத்து ஒவ்வொரு குழுவாக வந்து, கமிஷனர் வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்து, 400க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டு, கோயம்பேடு பகுதியில் உள்ள மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து, துாய்மை பணியாளர்கள் கூறுகையில், ''வேலை கேட்டுதான் போராடி வருகிறோம். மனு அளிக்கக்கூட போலீசார் அனுமதிப்பது இல்லை. எங்களின் இந்த நிலைக்கு, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கார்த்திகேயன், குமரகுருபரன் ஆகிய நான்கு பேரும்தான் காரணம்,'' என்றனர்.

related_post