சென்னையில் அதிகாலையில் கனமழை: இன்றும், நாளையும் தமிழகத்தில் மிதமான மழை

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆக.,22) அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம் தி.நகர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.
கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை துரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ , மற்றும் அடையாறில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 27 வரை மிதமான மழை தொடரலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.