dark_mode
Image
  • Wednesday, 13 August 2025

டெல்டா மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை எப்படி இருக்கும்? - முக்கிய அப்டேட்

டெல்டா மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை எப்படி இருக்கும்? - முக்கிய அப்டேட்

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அது தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் தாக்கம் தமிழக எல்லையோர மாவட்டங்களில் அதிகளவில் உள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது.

சென்னைவானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன

அதேபோல இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

 

ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 - 50 கி.மீ வேகத்திலும் இடையே 60 கி.மீ வேகத்திலும் வீசலாம் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.