அமித்ஷா குறித்து அவதூறு: ராகுலுக்கு நிபந்தனை ஜாமின்

ராஞ்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறு பரப்பும் வகையில், பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா என்ற இடத்தில் கடந்த 2018 ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறு பரப்பும் வகையில் ராகுல் பேசியதாக பிரதாப் குமார் என்பவர் ராஞ்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பிறகு இந்த வழக்கு சாய்பாசாவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி ராகுலுக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் ராகுல் முறையீடு செய்தார். ஆனால், ஜூன் 26 ம் தேதி ஆஜராகவேண்டும் என ஐகோர்ட் கூறியது. அன்றைய தினம் வேறு வேலை உள்ளதால், ஆக., 6 ல் ஆஜராக அனுமதிக்கும்படி ராகுல் தரப்பில் விடுத்த கோரிக்கையை கோர்ட் ஏற்றுக் கொண்டது.
இதன்படி, சாய்பாசா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரியா ராணி திக்கா முன்பு ராகுல் ஆஜரானார். அப்போது ஜாமின் வழங்கும்படி ராகுல் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 'விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.