ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது; நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்

மதுரை: 'திருப்பரங்குன்றத்தில், ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையின் எல்லையை அளவீடு செய்வதற்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை'யாக மாற்ற முயற்சிப்பதாக, ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், 'மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. ஆங்கிலேயர் ஆட்சியின்போதே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, ஆடு, கோழி பலியிட்டு, சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டார்.
இதுபோல, கட்சியின் மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார். இதுபோல, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகளில், நீதிபதி நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்; நீதிபதி ஸ்ரீமதி, மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார். இதனால், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பு மனுக்கள் மாற்றப்பட்டன. அதன் மீதான விசாரணை, நேற்று நடந்தது.