வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு.. சென்னைக்கு கனமழையா?

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.
இதன் காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 18 வரை தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.