விதை விதைச்ச உடனே பழம் சாப்பிட முடியுமோ! - சிவாஜி ஸ்டைலில் விஜய்க்கு பதில் சொன்ன இபிஎஸ்

நடிகர் விஜய்யின் பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இரு தரப்பிலும் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், விஜய் அதிக இடங்களை கேட்டதால் கூட்டணி சாத்தியமாகவில்லை என்றும் தமிழக அரசியல் அரங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பேசப்பட்டது.
அதிமுக - தவெக கூட்டணி யூகம்!
அதன் பின்னரே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் விஜய்யும் திமுகவை எதிர்ப்பது போல அதிமுகவை எதிர்ப்பது இல்லை. திமுக விஜய்யை எதிர்ப்பது போல, அதிமுக விஜய்யை எதிர்ப்பது இல்லை.
அதிமுகவை விமர்சித்த விஜய்
அதிமுக குறித்து அவர் பேசும் போது, “தவெகவுக்கு மக்கள் சக்தி இருக்கும்போது அடிமைக் கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் என்ன? ஒரு பக்கம் RSS-இடம் அடி பணிந்து கிடப்பது, மறுபக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என மக்களை ஏமாற்றும் கூட்டணியாக தவெக இருக்காது” என விமர்சித்து பேசினார்.அதோடு மட்டுமல்லாமல் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக தொண்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருவதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.
அதிமுகவை நேரடியாக விமர்சிக்காமல் இருந்த விஜய் விமர்சிக்க தொடங்கியுள்ளதால் எடப்பாடி பழனிசமி உடனடியாக எதிர்வினை ஆற்ற தொடங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
காஞ்சிபுரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இப்பொழுது யார் கையில் இருக்கிறது என்று கேட்கின்றார்கள். பாவம், அறியாமையின் காரணமாக பேசுவதாக நான் பார்க்கின்றேன். இது கூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவரா இருக்கிறார் என்று சொன்னால் அவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்? சிந்தித்து பாருங்கள். (கூட்டத்தை பார்த்து)இவ்வளவு பேர் இருக்கறீங்க, இவ்வளவு பேரு அண்ணா திமுக தொண்டர்கள் நிர்வாகிகள், அனுதாபிகள் இருக்கிறீர்கள்.ஆகவே இன்றைக்கு நாட்டிலே என்ன நடக்கிறது என்று தெரியாமல் சில பேர் சில கருத்துக்களை தன் இஷ்டம் போல் பேசி வருகிறார்கள். ஆனால் அண்ணா திமுக அப்படி இல்லை. நம்முடைய தலைவர்கள் தோற்றிவித்த கட்சி ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி அதன் மூலமாக ஏற்றம் பெற்ற கட்சி அண்ணா திமுக கட்சி.
ஒரு மரம் எடுத்தவுடனே பலன் தருவதில்லை. முதலிலே செடியை நடுவோம். அதற்கு தண்ணி ஊற்ற வேண்டும். அதை பராமரிக்க வேண்டும். எரு இட வேண்டும், அது மெல்ல மெல்ல பெரியதாகி மரமாகி பிறகு அந்த மரம் பூ பூத்து காய்காத்து கனி கொடுக்கும். அப்படித்தான் ஒரு இயக்கமும் எடுத்தவுடனே எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது” என்று கூறினார்.