சிங்கப்பூரில் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்ன? – புதிய புள்ளிவிவரங்கள் வெளியீடு
சிங்கப்பூர்: உலகின் பாதுகாப்பான மற்றும் ஒழுங்குமுறையுள்ள நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிங்கப்பூரில், 2025ஆம் ஆண்டுக்கான விவாகரத்து தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், இளம் தம்பதிகள் விவாகரத்து பெறுவதற்கான முக்கிய காரணங்கள் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
2025ஆம் ஆண்டு முஸ்லிம் அல்லாத தம்பதிகளின் விவாகரத்துகளில் 48.7% பேர் "ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை" (Unreasonable Behaviour) என்பதையே முக்கிய காரணமாக குறிப்பிட்டுள்ளனர். அதேவேளையில், திருமணத்திற்கு புறம்பான உறவு (கள்ள உறவு) காரணமாக விவாகரத்து பெற்றவர்கள் வெறும் 0.9% மட்டுமே.
மறுபுறம், முஸ்லிம் சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாகரத்துகளில், 21.5% பேர் "கருத்து வேறுபாடு அல்லது ஒத்துப்போகாத குணநலன்" காரணமாகவும், 18.4% பேர் துரோகம் அல்லது திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாகவும் விவாகரத்து பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
சட்ட நடைமுறையில் உள்ள வித்தியாசம்
சிங்கப்பூரில் முஸ்லிம் அல்லாதவர்களின் விவாகரத்து வழக்குகளை குடும்ப நல நீதிமன்றம் விசாரிக்கிறது. அங்கு திருமணம் முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்பதை நிரூபிக்க சட்டப்படி குறிப்பிடப்பட்ட காரணங்களில் ஒன்றைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
அதில் இடம்பெறும் காரணங்கள்:
- திருமணத்திற்கு புறம்பான உறவு
- கைவிடுதல்
- ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை
- இருவரின் சம்மதத்துடன் 3 ஆண்டுகள் பிரிந்து வாழ்தல்
- சம்மதமின்றி 4 ஆண்டுகள் பிரிந்து வாழ்தல்
- பரஸ்பர சம்மத விவாகரத்து
பரஸ்பர சம்மத விவாகரத்து அதிகரிப்பு
2024ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பரஸ்பர சம்மத விவாகரத்து நடைமுறை தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில், கணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை.
இதனால், குழந்தைகளின் நலன், சொத்து பகிர்வு, பொருளாதார ஏற்பாடுகள் போன்ற முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி, தேவையற்ற சட்ட மோதல்களைத் தவிர்க்க முடிகிறது.
'ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை' ஏன் அதிகம் குறிப்பிடப்படுகிறது?
குடும்ப நல நீதிமன்றங்களில் திருமணத்திற்கு புறம்பான உறவை நிரூபிக்க புகைப்படங்கள், வீடியோக்கள், தனியார் விசாரணை அறிக்கைகள் போன்ற வலுவான ஆதாரங்கள் தேவைப்படும். இதனால், பலர் அந்த காரணத்தை விட "ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை" என்ற காரணத்தையே தேர்வு செய்கிறார்கள்.
இதன் கீழ் குடும்ப வன்முறை, கடுமையான வார்த்தைகளால் துன்புறுத்தல், கட்டுப்படுத்தும் மனநிலை, மது அல்லது போதைப் பழக்கம், சூதாட்டம், குடும்பப் பொறுப்புகளை புறக்கணித்தல் உள்ளிட்டவை அடங்கும்.
இந்த புதிய புள்ளிவிவரங்கள், சிங்கப்பூரில் விவாகரத்து நடைமுறைகளிலும், தம்பதிகள் தேர்வு செய்யும் சட்ட வழிகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன.