dark_mode
Image
  • Wednesday, 27 May 2026

ஆண்டுக்கு 3.5 டன் தங்கம் தேவை.! விஜய் அரசின் சீர் திட்டங்கள் குறித்து பொருளாதார கவலை

ஆண்டுக்கு 3.5 டன் தங்கம் தேவை.! விஜய் அரசின் சீர் திட்டங்கள் குறித்து பொருளாதார கவலை

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாக கருதப்பட்ட சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில், பாரம்பரிய திராவிட கட்சிகளை பின்னுக்குத் தள்ளி Vijay தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியை அமைக்க தேவையான 118 இடங்களுக்கு குறைவாக இருந்தபோதிலும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் அரசு அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 10ஆம் தேதி விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்த விஜய், குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழை குடும்பங்களை குறிவைத்து வெளியிட்ட இரண்டு முக்கிய அறிவிப்புகள் பெரும் கவனம் பெற்றன.

அதன்படி, “அண்ணன் சீர் திட்டம்” என்ற பெயரில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு “தாய்மாமன் சீர் திட்டம்” மூலம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டங்கள் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், தற்போது தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது விஜய் அரசுக்கு மிகப்பெரிய நிதிச் சவாலாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1.18 லட்சத்தை கடந்துள்ளது. பல ஏழை குடும்பங்களுக்கு ஒரு பவுன் நகை கூட எட்டாக்கனியாக இருக்கும் சூழலில், இந்த திட்டம் திருமணச் செலவுக்கு உதவியாக இருக்கும் என பலர் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் சர்வதேச அளவில் உருவான பொருளாதார நெருக்கடிகள் இந்த திட்டத்தின் நடைமுறைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஈரான் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அமெரிக்க டாலர் தேவை அதிகரித்ததால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என பிரதமர் Narendra Modi அறிவுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தங்க இறக்குமதி செலவு அதிகரித்து, சந்தை விலையும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் உயர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில் 60 சதவீதம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என கணக்கிட்டால், ஆண்டுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அரசு ஒரு பவுன் தங்கம் வழங்க வேண்டியிருக்கும். இதற்காக மட்டுமே ஆண்டுக்கு சுமார் 2400 கிலோ, அதாவது 2.4 டன் தங்கம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரை பவுன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தையும் சேர்த்து பார்க்கும்போது, ஆண்டுக்கு மேலும் 1.05 டன் தங்கம் தேவைப்படும் நிலை உருவாகும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 7.5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனர். இதில் சுமார் 70 சதவீத குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்துவதற்கு மட்டுமே ஆண்டுக்கு ரூ.5500 கோடிக்கும் அதிகமான செலவு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணக்கிடுகின்றனர். மேலும், தங்கத்தின் விலை ஆண்டுதோறும் சராசரியாக 20 சதவீதம் உயர்ந்தால், அரசு தனது பட்ஜெட்டில் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டிய கட்டாயமும் உருவாகும். இதனால் நீண்டகால அடிப்படையில் இந்த திட்டம் தமிழக அரசின் நிதிநிலைக்கு பெரிய சுமையாக மாறக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசுக்கு நிர்வாக அனுபவம் குறைவாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மறுபுறம் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்ற பொருளாதார நெருக்கடிகளையும் அரசு சமாளிக்க வேண்டியுள்ளது. ஒருபுறம் மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; மறுபுறம் மாநில வருவாயை அதிகரித்து நிதிநிலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற இரட்டை சவால்கள் விஜய் அரசுக்கு உருவாகியுள்ளன. இந்த சூழலில் தங்க சீர் திட்டங்கள் அரசின் மிகப்பெரிய பொருளாதார சவாலாக மாறியுள்ளன.

related_post