டெண்டர் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: இனி அனைத்து நகராட்சி டெண்டர்களும் ஆன்லைனில் மட்டும்.!
சென்னை: தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக தலைமையிலான கூட்டணி அரசு, நிர்வாகத் துறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் தனது முதல் முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. குறிப்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் நடைபெறும் டெண்டர் செயல்முறைகள் இனி முழுமையாக ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விரிவான சுற்றறிக்கையை நகராட்சி நிர்வாக இயக்குநரக கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அவசர அவசரமாக வெளியிடப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கான டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து புதிய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பும் அதற்கு பிந்தைய இடைப்பட்ட நாட்களிலும், பல்வேறு துறைகளில் குறுகிய கால அவகாசத்தில் டெண்டர்கள் வெளியிடப்பட்டதாகவும், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து கடந்த மே 13 முதல் மே 22 வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட அல்லது இறுதி செய்யப்பட்ட அனைத்து குறுகிய கால டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்யவோ அல்லது நிறுத்திவைக்கவோ தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் சில மணி நேரங்களிலேயே டெண்டர் நடைமுறைகள் முடிக்கப்பட்டதாகவும், போட்டித்தன்மைக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் புதிய அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில், இனி நகராட்சி நிர்வாக டெண்டர்கள் அனைத்தும் முழுமையாக ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும் டெண்டர் விண்ணப்பதாரர்களின் விவரங்களை முன்கூட்டியே அறிய உதவும் கள ஆய்வு சான்றுகள் மற்றும் உபகரண இருப்புச் சான்றுகள் போன்றவை இனி கட்டாயமாக கேட்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக நடைமுறைகள் மாற்றப்படுவதைத் தடுக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் முன்வைப்புத் தொகை மற்றும் பாதுகாப்புத் தொகை உள்ளிட்ட அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், விண்ணப்பதாரர்களை தேவையின்றி நேரில் வரவழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டட அனுமதி கோரி பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மீதும் தேவையற்ற தாமதம் செய்யக்கூடாது; சட்ட விதிகளுக்குட்பட்டு உரிய காலக்கெடுவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே டெண்டர் முறைகேடுகள் மற்றும் நிர்வாக தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தவெக அரசு எடுத்துள்ள இந்த டிஜிட்டல் சீர்திருத்த நடவடிக்கைகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பை வலுப்படுத்தும் விஜய் அரசின் முதல் பெரிய நிர்வாக நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.