டெண்டர் முறைகேடு சர்ச்சை: தவெக அமைச்சரின் துறையில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்.!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது. அந்த அமைச்சரவையில் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், அவரது துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட குடிநீர் திட்ட டெண்டர் தொடர்பாக முறைகேடு புகார் எழுந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட காரைப்பேட்டை கிராமத்தில், 2025-26ஆம் ஆண்டுக்கான 15வது மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ.16.83 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்காக டெண்டர் அறிவிக்கப்பட்டது. ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அது முடிவடைந்ததாக தகவல் வெளியாகியது. இதனால், டெண்டர் முன்கூட்டியே குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பான அரசு அலுவலக அறிவிப்பு பலகையின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பின.
இந்த விவகாரம் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், டெண்டர் நடைமுறைகளில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளதாக அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட விளக்கத்தில், குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு 12.05.2026 முதல் 19.05.2026 வரை அறிவிக்கப்பட்டதாக பதிவிடப்பட்டிருந்தாலும், நடைமுறைக்கு மாறாக 18.05.2026 அன்று தான் டெண்டர் உருவாக்கப்பட்டு, 19.05.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்த விதிமுறைகளின்படி முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய டெண்டர் ஆவணங்கள் சரியான காலக்கெடுவில் பதிவேற்றப்படவில்லை என்றும், அனுமதி பெறாமல் குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால், டெண்டர் ரத்து செய்யப்பட்டதுடன், விதிமுறைகளை மீறியதாக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், புதிய அரசின் நிர்வாக செயல்பாடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வழிவகுத்துள்ளது. அதேசமயம், முறைகேடு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அரசின் கண்காணிப்பு செயல்முறையை காட்டுவதாக ஆளுங்கட்சி தரப்பு விளக்கம் அளித்து வருகிறது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.