500 யூனிட்டுக்குள் இருந்தும் அதிக மின் கட்டணம்.? காரணத்தை விளக்கிய EB
சென்னை: தமிழகத்தில் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகும், பல வீடுகளுக்கு அதிக அளவில் மின் கட்டணம் வந்திருப்பது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. “200 யூனிட் இலவசம் என்றால் எங்களுக்குக் கட்டணம் மிகக் குறைவாக வர வேண்டாமா? ஏன் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வருகிறது?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சந்தேகங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது விளக்கம் அளித்து வருகிறது. குறிப்பாக 420 யூனிட்டுகள் பயன்படுத்திய ஒருவரின் மின் கட்டண விவரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிய நிலையில், அதற்கான முழுமையான கணக்கீட்டை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 101 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு, முதல் 100 யூனிட் கழித்த பின் மீதமுள்ள பயன்பாட்டுக்கே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலின்போது தவெக தலைவர் விஜய், ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, மே 10ம் தேதி முதல் புதிய மானியத் திட்டத்தை அமல்படுத்தும் ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டார். இந்த திட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், 500 யூனிட்களை மீறுபவர்களுக்கு பழைய 100 யூனிட் இலவச திட்டமே தொடரும் என்றும் அரசு அறிவித்தது.
புதிய திட்டம் அறிவிக்கப்பட்ட உடனே மின்வாரியம் தனது கட்டண கணக்கீட்டு மென்பொருளில் மாற்றங்களை செய்யத் தொடங்கியது. இதற்கான சுற்றறிக்கைகள் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அனுப்பப்பட்டதுடன், புதிய மானிய கணக்கீட்டு முறையை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விளக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் திட்டம் மே 10ம் தேதி முதல் மட்டுமே அமலுக்கு வந்ததால், ஏற்கனவே தொடங்கியிருந்த பில்லிங் சுழற்சிகளில் முழு 200 யூனிட் சலுகை வழங்கப்படவில்லை. இதுவே தற்போது அதிக கட்டணம் வந்ததற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சரவணன் என்ற நுகர்வோர் தனது வீட்டில் 423 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தும், மின் கட்டண ரசீதில் 200 யூனிட் இலவசம் காட்டப்படாமல் 100 யூனிட் மட்டுமே கழிக்கப்பட்டிருப்பதாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்வாரியம், அவரது தற்போதைய பில்லிங் காலத்தில் மே 10 முதல் மே 25 வரை உள்ள 15 நாட்கள் மட்டுமே புதிய மானியத் திட்டத்திற்குத் தகுதியானதாக இருந்ததாக தெரிவித்தது. எனவே முழு இரண்டு மாத சுழற்சிக்கான 200 யூனிட் இலவச சலுகை வழங்கப்படவில்லை என்றும் விளக்கியது.
மின்வாரியத்தின் கணக்கீட்டுப்படி, 423 யூனிட்டுகளுக்கான வழக்கமான மின் கட்டணம் ரூ.1320 ஆகும். இதில் வழக்கமான 100 யூனிட் இலவசம் வழங்கப்பட்டதுடன், புதிய திட்டத்தின் கீழ் கூடுதலாக 15 நாட்களுக்கு ஏற்ப 27 யூனிட்டுகளுக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அந்த 27 யூனிட்டுகளுக்கான சலுகை தொகை ரூ.63 ஆகும். இதன் அடிப்படையில் ரூ.1320 இலிருந்து ரூ.63 கழிக்கப்பட்டு, இறுதியாக ரூ.1257 செலுத்த வேண்டிய தொகையாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த முழு பில்லிங் சுழற்சியில் மொத்த மின் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்குள் இருந்தால், முழுமையான 200 யூனிட் இலவச மின்சார சலுகை வழங்கப்படும் என்றும் மின்வாரியம் உறுதி அளித்துள்ளது. அதாவது, தற்போது பலருக்கும் வந்திருக்கும் அதிக கட்டணம் என்பது புதிய திட்டம் பகுதி காலத்திலேயே அமலுக்கு வந்ததன் விளைவாகும்; வரும் அடுத்தடுத்த பில்ல்களில் முழு சலுகை பிரதிபலிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.