dark_mode
Image
  • Tuesday, 26 May 2026

அதிமுகவில் உட்கட்சி புயல்: எம்எல்ஏ ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் விளக்கம்.!

அதிமுகவில் உட்கட்சி புயல்: எம்எல்ஏ ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் விளக்கம்.!

சென்னை: தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரம் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், “சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவில் எதிர்பாராத பிளவு வெளிப்பட்டது. குறிப்பாக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆதரவு தரப்பைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டதால், எடப்பாடி பழனிசாமி அணியில் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அந்த 25 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் மனு அளித்தனர். ஆனால் அதன்பிறகு சில எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது அணியில் தங்களை இணைத்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் சி.வி.சண்முகம் தரப்பில் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் உடனடியாக ஏற்கப்பட்டதுடன், பின்னர் அவர்கள் தவெகவில் இணைந்தனர். இன்று மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பினர், “ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்கக் கூடாது; முதலில் தகுதி நீக்க மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர். சபாநாயகர் நடவடிக்கையில் பாரபட்சம் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சட்ட விதிகளுக்குட்பட்டே விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் எந்த விதிமுறையும் மீறப்படவில்லை. முழுக்க முழுக்க சபாநாயகருக்கான அதிகார வரம்புக்குள் தான் செயல்பட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வழங்கிய மனு மீது நடவடிக்கை எடுக்க சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர அதை நிராகரிக்கவில்லை. தவெக அரசுக்கு ஆதரவு அதிகரிக்கிறதா குறைகிறதா என்பதை கவனிப்பது என் வேலை அல்ல; அவையில் எண்ணிக்கையை சரிபார்ப்பதே என் பொறுப்பு” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் தொடரும் இந்த உள்கட்சி மோதல், எதிர்க்கட்சியின் எதிர்காலத்திலும் தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகளிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

related_post