dark_mode
Image
  • Wednesday, 27 May 2026

ரூ.79 கட்டினா Exclusive Stickers, Themes, Custom Ringtones.! WhatsApp புதிய திட்டம்

ரூ.79 கட்டினா Exclusive Stickers, Themes, Custom Ringtones.! WhatsApp புதிய திட்டம்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட தகவல் தொடர்பு தேவைகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் WhatsApp, தற்போது இந்திய பயனர்களுக்காக புதிய சந்தா அடிப்படையிலான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட தகவல் பரிமாற்றம் முதல் அலுவலக வேலைகள், ஆன்லைன் வணிகம், சிறு தொழில்கள் வரை அனைத்திற்கும் முக்கிய கருவியாக மாறியுள்ள வாட்ஸ் அப், காலத்திற்கேற்ற புதிய அப்டேட்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட “WhatsApp Plus” என்ற பிரீமியம் சந்தா சேவை தற்போது முதன்முறையாக இந்தியாவிலும் அறிமுகமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக, வாட்ஸ் அப் பயன்பாடு இலவசமாகவே தொடரும் என்றும், வழக்கம்போல் மெசேஜ் அனுப்புதல், கால் பேசுதல் உள்ளிட்ட அடிப்படை சேவைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதலான பிரீமியம் வசதிகளை பெற விரும்பும் பயனர்கள் மாதந்தோறும் ரூ.79 சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. இந்த சந்தா முறையின் மூலம் பயனர்களுக்கு பல பிரத்யேக அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி, சந்தா செலுத்தும் பயனர்கள் சாதாரண பயனர்களுக்கு கிடைக்காத எக்ஸ்க்ளூசிவ் ஸ்டிக்கர்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்ப முடியும். அதேபோல், வாட்ஸ் அப் செயலியின் தோற்றத்தை மாற்றும் வகையில் தனிப்பயன் தீம்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட உள்ளது. தற்போது மொபைலில் ஒவ்வொரு தொடர்புக்கும் தனித்தனி ரிங்டோன் அமைப்பது போல, இனி ஒவ்வொரு வாட்ஸ் அப் சாட்டிற்கும் தனிப்பட்ட ரிங்டோன் அமைக்கவும் சந்தா பயனர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

மேலும், முக்கியமான சாட்களை அதிக எண்ணிக்கையில் பின் செய்து வைத்துக்கொள்ளும் வசதி, விருப்பமான ஐகான்களை தேர்வு செய்து செயலியின் தோற்றத்தை மாற்றும் அம்சம் உள்ளிட்ட பல கூடுதல் வசதிகளும் இந்த புதிய திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வாட்ஸ் அப் நிறுவனம் இதுவரை எந்த அடிப்படை சேவைக்கும் கட்டணம் வசூலிக்காத நிலையில், இந்தியாவில் முதன்முறையாக சந்தா முறை அறிமுகப்படுத்தப்படுவது தொழில்நுட்ப உலகில் கவனம் பெற்றுள்ளது.

புதிய வசதிகளை பயன்படுத்த விரும்புவோர் முதலில் ஒரு மாத காலத்திற்கு இலவச டிரயல் மூலம் சேவையை அனுபவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து பயன்படுத்த மாதாந்திர சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக, வாட்ஸ் அப் செயலியின் Settings பகுதியில் உள்ள “Subscriptions” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து “Free Trial Month” என்பதை கிளிக் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த வசதி தற்போது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கிடைக்கவில்லை. படிப்படியாக பயனர்களுக்கு அப்டேட் வழங்கப்பட்டு வருவதால், சிலரின் வாட்ஸ் அப் செட்டிங்ஸில் “Subscriptions” என்ற விருப்பம் இன்னும் தோன்றாமல் இருக்கலாம். அடுத்த சில நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், இந்த சந்தா சேவை முழுக்க விருப்பத்தேர்வு அடிப்படையிலானது மட்டுமே என்றும், சந்தா செலுத்தாதவர்களும் வழக்கம்போல இலவசமாக வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த முடியும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. பிரீமியம் வசதிகளை விரும்புவோருக்கு மட்டும் இந்த புதிய திட்டம் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

related_post