dark_mode
Image
  • Tuesday, 26 May 2026

முதல்வராகி முதல் டெல்லி பயணம்: மோடி, அமித் ஷா, ராகுல் காந்தியைச் சந்திக்கும் விஜய்.!

முதல்வராகி முதல் டெல்லி பயணம்: மோடி, அமித் ஷா, ராகுல் காந்தியைச் சந்திக்கும் விஜய்.!

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஜோசப் விஜய் தேசிய தலைவர்களைச் சந்திக்க டெல்லி பயணம் மேற்கொள்வது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாளை (27-05-26) டெல்லி செல்லவுள்ள முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பா.ஜ.க முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பின் போது சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையீடு, மேலும் பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு நிறுத்தப்பட்ட கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் வலியுறுத்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் விஜய் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பு எதிர்கால தேசிய அரசியல் மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனைகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளார். கடந்த ஜனவரி மாதமே இந்த சிலையை திறந்து வைக்க அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் சூழ்நிலை காரணமாக அவரது பயணம் நடைபெறாமல் போனது. இந்நிலையில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள விஜயை பல்கலைக்கழக நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அழைத்ததையடுத்து, அவர் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க சம்மதித்துள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களையும், அதே நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் விஜய் சந்திக்க இருப்பது தேசிய அரசியல் வட்டாரங்களில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசுடன் நல்லுறவை பேணிக்கொண்டே, தமிழக உரிமை கோரிக்கைகளை வலுவாக முன்வைக்க விஜய் முயற்சி செய்கிறார் என்ற அரசியல் பார்வையும் உருவாகியுள்ளது.

related_post