dark_mode
Image
  • Sunday, 10 August 2025

ஆணவ கொலைகள் அதிகரிப்பு: ஐகோர்ட் வேதனை மாணவர் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

ஆணவ கொலைகள் அதிகரிப்பு: ஐகோர்ட் வேதனை மாணவர் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஆணவ கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலுார் கல்லுாரி மாணவர் மரணம் குறித்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசகுளி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயசூர்யா. இவர், அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் பி.காம்., படித்து வந்தார். கடந்த மே 18ல் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

மரணத்தில் சந்தேகம்

இந்நிலையில், தன் மகன் ஆணவ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவரின் தந்தை முருகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.அரசு கணேசன் வாதாடியதாவது: கல்லுாரியில் உடன் படித்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியை காதலித்ததால், அந்த மாணவியின் உறவினர்கள், மனுதாரரின் மகனை அடிக்கடி மிரட்டி உள்ளனர்.

கல்லுாரியில் உடன் படிக்கும் மாணவர் பிரவீன் என்பவர், மே 18ல் வலுக்கட்டாயமாக பைக்கில் ஜெயசூர்யாவை அழைத்து சென்றுள்ளார்; பின், வீடு திரும்பவில்லை. பல முறை மொபைல் போனில் தொடர்பு கொண்டதில், ஒரு முறை போனை எடுத்து, பிரவீன், ஜீவன் ஆகியோருடன் இருப்பதாக மனுதாரரிடம் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் மனுதாரரை அழைத்து, சாலை விபத்தில் ஜெயசூர்யா இறந்து விட்டார் என, குள்ளஞ்சாவடி போலீசார் கூறியுள்ளனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தும், போலீசார் மெத்தனப்போக்குடன் உள்ளனர். எனவே, விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.

அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், 'விசாரணை இன்னும் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில், அதிவேகமாக பைக் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

'சம்பவம் நடந்த அன்றிரவு, மூவரும் கடலுாரில் இருந்து, தங்கள் கிராமத்திற்கு திரும்பியபோது, பைக் சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்' என தெரிவித்தார்.

விசாரணை அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'பாதிக்கப்பட்டவர் விபத்தில் இறந்தாரா அல்லது யாராவது வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கொலை செய்தனரா என்பதை பிரேத பரிசோதனை வாயிலாக அறிய முடியுமா? பிரேத பரிசோதனைக்கும், சம்பவம் நடந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை. முழுமையான விசாரணை மட்டுமே, வழக்கில் உண்மையை வெளிக் கொணரும்' என்றார்.

பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக இது போன்ற குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. ஆணவ கொலை அதிகரித்து வந்தாலும், உண்மை வெளியில் வருவதில்லை.

இந்த வழக்கை பொறுத்தவரை, மாவட்ட காவல் துறையின் விசாரணையில், நீதிமன்றத்துக்கு சந்தேகம் உள்ளதால், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுவதற்கு, இது பொருத்தமான வழக்கு.

எனவே, ஆணவ கொலை என்ற சந்தேகம் உள்ளதால், விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை, இரண்டு வாரங்களில் சி.பி.சி.ஐ.டி., வசம் குள்ளஞ்சாவடி போலீசார் ஒப்படைக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி., நியாயமாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

related_post