dark_mode
Image
  • Saturday, 09 August 2025

பாமக பொதுக்குழுவுக்கு தடையில்லை – ராமதாஸின் 2 வாதங்களையும் நிராகரித்த நீதிமன்றம், அன்புமணி முன்னிலையில் இன்று கூட்டம்

பாமக பொதுக்குழுவுக்கு தடையில்லை – ராமதாஸின் 2 வாதங்களையும் நிராகரித்த நீதிமன்றம், அன்புமணி முன்னிலையில் இன்று கூட்டம்

 

சென்னை: திட்டமிட்டபடி இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. முன்னதாக நேற்று உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது இரு முக்கிய கருத்துகளை ராமதாஸ் நீதிபதி முன் வைத்திருக்கிறார். ஆனால், இது தந்தை மகன் இடையேயான தனிப்பட்ட மோதல் என நீதிபதி குறிப்பிட்டதோடு, ஒரு தனி அரங்குக்குள் நடக்கும் கூட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற ராமதாஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துள்ளார்.

 

உச்ச கட்டத்தில் வந்து நிற்கிறது பாட்டாளி மக்கள் கட்சியில் ராமராஸ் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஜிகே மணியை நீக்கிவிட்டு அன்புமணியை தலைவராக நியமித்தார் ராமதாஸ்.

 

அதற்கு பிறகு கட்சி முழுவதும் அன்புமணி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இதனிடையே ராமதாஸ் பேச்சை அன்புமணி கேட்கவில்லை என சில நிர்வாகிகள் ராமதாஸிடம் சொன்ன நிலையில், அதற்குப் பிறகு கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் ராமதாஸ் தலையிட ஆரம்பித்தார்.

 

அன்புமணி ராமதாஸ்

 

ஆனால் தற்போது வரை அன்புமணி, ராமதாஸின் பேச்சுக்கு எந்தவித எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வன்னியர் சங்க மாநாடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற போது அதற்கு முன்னதாக ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அன்றிலிருந்து நாளுக்கு நாள் ஏதாவது ஒரு விவகாரம் பாமகவில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அவர்களை சேர்ப்பதுமாக விவகாரம் பெரிதாகிக் கொண்டே போனது.

 

ராமதாஸ்

 

இதற்கிடையே மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த பொது குழுவை அன்புமணி நடத்தினார். அதற்கு பிறகு 100 நாள் சுற்றுப்பயணத்தையும் அன்புமணி தொடங்கினார். சுற்றுப்ப யணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டிஜிபி, உள்துறை செயலர் என ராமதாஸ் தரப்பு காய் நகர்த்த, அதற்கு பலன் இல்லாமல் போனது. இந்த நிலையில் இன்று பாமகவின் பொதுக்குழு நடைபெறும் என அன்புமணி அறிவித்தார். அதற்கு போட்டியாக ஆகஸ்ட் 17ஆம் தேதி பொதுக்குழுவை அறிவித்தார் ராமதாஸ்.

 

அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு.. மேல்முறையீட்டுக்கு செல்லும் ராமதாஸ்.. என்ன நடக்கும்?

 

பாமக பொதுக்குழு

 

இந்த நிலையில் பாமகவில் அன்புமணி தரப்பு பொதுக்குழுவை நடத்த தீவிரமாக தயாராகி வந்த நிலையில் நீதிமன்றத்திற்கு சென்றது ராமதாஸ் தரப்பு. கட்சி நிறுவனர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது, பொதுக்குழு நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, பொதுக்குழுக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. மற்ற வழக்குகள் போல் அல்லாமல் இந்த வழக்கில் இரு தரப்பையும் தனித்தனியாக சந்தித்து பேச வேண்டுமென கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நேற்று மாலை அன்புமணியை தனது அறையில் சந்தித்து பேசினார். தொடர்ந்து ராமதாஸ் காணொளி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர் ஆனார்.

 

தனிப்பட்ட மோதல்

 

இரு தரப்பிடமும் பேசிய நீதிபதி தொடர்ந்து தனது தீர்ப்பை அறிவித்தார். அதில் இரண்டு முக்கிய கருத்துக்களை அவர் தெரிவித்திருக்கிறார். அதன்படி இது தந்தை மகன் இடையேயான தனிப்பட்ட மோதல் இருவரின் தனிப்பட்ட பிரச்சனைக்காக ரீட் மனுவை தாக்கல் செய்ய முடியாது. வேண்டுமென்றால் சிவில் நீதிமன்றத்தில் இருவரும் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

 

மாமல்லபுரத்தில் நடக்கும் பாமக பொதுக்குழு.. அன்புமணி தலைமையில் கூடும் பாட்டாளிகள்!

 

சட்டம் ஒழுங்கு

 

மேலும் பொதுக்குழுவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு தனி அரங்குக்குள் நடக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒருவேளை சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கூறியதோடு ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழுவை தடை செய்ய இரண்டு முக்கிய கருத்துகளை ராமதாஸ் முன்வைத்த நிலையில் அது இரண்டையுமே நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இன்று தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்றத்திற்கு ராமதாஸ் தரப்பு சென்றாலும் அதற்குள் பொதுக்குழு நடந்து முடிந்துவிடும் என்பதை குறிப்பிடத்தக்கது.

 

செய்தியாளர் மு. கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

related_post