dark_mode
Image
  • Thursday, 31 July 2025

நாய்களை கருணை கொலை செய்ய அரசாணையா? அதிகாரிகள் விளக்கம்

நாய்களை கருணை கொலை செய்ய அரசாணையா? அதிகாரிகள் விளக்கம்

சென்னை: 'நோய்வாய்பட்ட நாய்களை கருணை கொலை செய்வது தொடர்பாக, தமிழக கால்நடை துறை சார்பில், புதிதாக அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை; ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான் அது' என, கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணை கொலை செய்ய, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை என கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

கடந்த 2023ல், ஏ.பி.சி., திட்டம் என்ற பெயரில் நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இத்திட்டத்தின் கீழ், நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் விடப்படும். இதை, பிராணிகள் நல வாரியம் கண்காணிக்கிறது.

அதேபோல, கேன்சர் போன்ற தீராத நோய்வாய்ப்பட்ட நாய்களை, கால்கள் உடைந்து வாழ சிரமப்படும் நிலையில் உள்ள நாய்களை கருணை கொலை செய்யலாம். அதற்கென ஒரு கமிட்டி உள்ளது.

அவர்கள் அந்த நாயை நேரில் பார்த்து பரிசோதித்த பின், அவர்களின் அறிவுரையின் படி, தகுதியுள்ள கால்நடை மருத்துவர், அந்த நாயை கருணை கொலை செய்யலாம். இதுவும், 2023 முதல் நடைமுறையில் உள்ளது.

ஆனால், துன்புறுத்தி கொல்லக்கூடாது. அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. 'அனஸ்தீசியா' எனப்படும் மயக்க மருந்தை அதிகமாக கொடுத்து, இதயத் துடிப்பை செயலிழக்கச் செய்வர்.

இது நடைமுறையில் உள்ளதே. தமிழகத்தை பொறுத்தவரை, இது குறித்து புதிதாக எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

related_post