அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் வசூல் புகார்: ரூ.15 லட்சம் பேரம் பேசியதாக ஆடியோ வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதனை வலுப்படுத்தும் வகையில் புதிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றங்களில் அரசின் சார்பில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தகுதி, நேர்மை மற்றும் தொழில்முறை திறனுக்கு பதிலாக பணம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் அனீஷ், பெண் வழக்கறிஞரிடம் அரசு வழக்கறிஞர் பதவிக்காக ₹15 லட்சம் கேட்டதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில், ₹15 லட்சம் வழங்க முடியாது என பெண் வழக்கறிஞர் தெரிவிக்க, அதற்கு பதிலாக ₹12 லட்சம் கொடுத்தால் அரசு வழக்கறிஞராக நியமனம் பெற ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் உண்மைத்தன்மையை விசாரித்து, குற்றச்சாட்டுகள் உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பு: வெளியான ஆடியோவின் உண்மைத்தன்மை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கம் மற்றும் விசாரணை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.