5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை.. சோதனையில் அசத்தல் ..!
5,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா தனது பாதுகாப்பு பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள எதிரிகளை தாக்கும் வகையில் பல ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், தற்போது கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று சோதனை செய்துள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
700 கிலோ மீட்டர் இயங்கு தூரம் சென்று தாக்கும் அக்னி-1 உருவாக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. இதன் திட்ட இயக்குனராக இருந்த அப்துல் கலாம் அவர்களுக்கு பல வெளிநாடுகளின் நெருக்கடி இருந்தபோதும் வெற்றிகரகாக சோதனை செய்து சாதனை செய்தார்.
அக்னி-2 ஏவுகணை, 2000 முதல் 2500 கிலோ மீட்டர் சென்று இலக்கை தாக்கும். இது 20 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் விட்டமும், 18 டன் எடையும் கொண்டது. 2013ஆம் ஆண்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது. அக்னி-3, அக்னி-4 ஏவுகணைகள் 2,500 முதல் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்துசென்று இலக்கை தாக்கும் திறண்கொண்டது. இதில் மேலும் சில ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு வெற்றிபெற்றன.