dark_mode
Image
  • Saturday, 10 January 2026

தமிழகத்தில் மிக கனமழை… ரெண்டு நாட்கள் பெரிய சம்பவம்- இலங்கையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்தம்!

தமிழகத்தில் மிக கனமழை… ரெண்டு நாட்கள் பெரிய சம்பவம்- இலங்கையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்தம்!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது இலங்கையை இன்று கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது இலங்கையின் பொட்டுவில் பகுதியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு – தென்கிழக்கில் 800 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் பொட்டுவில் மற்றும் திரிகோணமலை கடற்கரையை பகுதியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

ஜனவரி 9, 2026 மழை நிலவரம்

தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் பரவலான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

ஜனவரி 10, 2026 மழை நிலவரம்

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜனவரி 11, 2026 மழை நிலவரம்

தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் பரவலாக மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

related_post