dark_mode
Image
  • Friday, 09 January 2026

காற்று மாசு காரணங்களை வெளிப்படையாக அறிவியுங்கள்; டில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

காற்று மாசு காரணங்களை வெளிப்படையாக அறிவியுங்கள்; டில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

டில்லி காற்று மாசு விவகாரத்தில், அதற்கான காரணங்களை வெளிப் படையாக அறிவியுங்கள், அதன் பின் தீர்வுகளை வழங்கலாம்' என, காற்று தர மேலாண்மை கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

டில்லியில் நிலவும், காற்று மாசு தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர், விரிவான அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.

ஆய்வு

அதில், 'கனரக வாகனங்கள் மற்றும் முறையற்ற கட்டுமானங்கள் தான் டில்லியில் அதிக அளவில் காற்று மாசு ஏற்பட காரணம்.

'கடந்த 2022ல், காற்று தர மேலாண்மை கமிஷன் காற்று மாசை தடுக்க ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவுகள் பற்றி பொதுத்தளத்தில் எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை' என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

டில்லியில் நிலவும் காற்று மாசில், 40 சதவீதம் வாகனங்களால் தான் ஏற்படுகிறது என, தெரியவந்துள்ளது. ஆனால், கடந்த காலங்களில் அதை வெளிப்படையாக சொல்லாமல் விவசாயிகள் மீது மொத்த பழியும் போடப்பட்டது.

கொரோனா தொற்று காலத்தில் கூட விவசாயிகள் பயிர் கழிவுகளை எரித்தனர். ஆனால், அப்போது டில்லி மக்கள் வெளிச்சமான நீல வானத்தை பார்த்தனர்.

பொறுப்பு

வாகன போக்குவரத்தும், கட்டுமானமும் தான் காரணம் எனில், அவற்றை நிறுத்த முடியாது. எனவே, மாசு கட்டுப்பாட்டை செயல்படுத்தும் போது சமூக, பொருளாதார சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் தான் நிபுணர்களின் மதிப்பீடுகள் தேவை.

காற்று தர மேலாண்மை கமிஷன், துறை சார்ந்த நிபுணர்களை தேர்ந்தெடுத்து, ஒரே குடைக்குள் கொண்டு வர வேண்டும்.

இரு வாரங்களுக்குள் அவர்கள் கூட்டம் நடத்தி, டில்லியின் காற்று தரம் மோசமடைவதற்கான காரணம் குறித்து, ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

காரணங்களையும், விளைவுகளையும் கண்டறிவதே நிபுணர் குழுவின் முதல் பொறுப்பு. அதன் பின் காற்று மாசை எப்படி சமாளிப்பது என்பதை கூறுங்கள். இந்த விஷயத்தில் காற்று தர மேலாண்மை கமிஷன் தோற்று விட்டது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

related_post