அமித் ஷாவுடன் பேசிக் கொண்டது என்ன? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு!
அதிமுக பாமக கூட்டணி காலையில் உறுதியான நிலையில், மாலையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இடையிலான சந்திப்பு, தமிழ்நாடு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக, பாமக கூட்டணி
ஏற்கனவே அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரை சந்தித்து கூட்டணியில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.