ஜனநாயகன் சென்சார் வழக்கில் தீர்ப்பு: உயர் நீதிமன்றம் 3 விதமான உத்தரவுகள் பிறப்பிக்க வாய்ப்பு!
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் பிரச்சினை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று விரிவாக அலசலாம்.
விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான். அதுவும் தமிழ் திரையுலகில் உச்சபட்ச நட்சத்திரமாக, வசூல் மன்னனாக திகழும் சூழலில், முதல் நாள் முதல் ஷோ மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். எனவே இவரது கடைசி படமாக ஜனநாயகன் அறிவிக்கப்பட்டது.
விஜய்யின் கடைசி படம் மீது எதிர்பார்ப்பு
இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே “One Last Time” என்ற உணர்ச்சிப்பூர்வமான தருணத்திற்கு ரசிகர்கள் தயாராக தொடங்கினர். ஜனநாயகன் திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்ற வேண்டும். வசூல் ரீதியாக புதிய சாதனை படைக்க செய்ய வேண்டும் என்றெல்லாம் பலரும் கணக்கு போட்டனர். ஆனால் சென்சார் தொடர்பான விஷயம் பெரிய சிக்கலாக முன்வந்து நிற்கிறது. இதனால் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் தள்ளி போடப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்காதது ஏன்?
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி சென்சார் போர்டிற்கு தட்கல் முறையில் படத் தயாரிப்பு நிறுவனமான KVN Productions விண்ணப்பம் செய்தது. உடனடியாக படத்தை பார்த்து விட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். படத்தை பார்த்த CBFC குழுவினர் 27 திருத்தங்களை கூறியுள்ளனர். அவற்றை சரிசெய்து மீண்டும் படத்தை சமர்பிக்கின்றனர். அதன்பிறகு வாய்மொழி உத்தரவாக U/A சான்றிதழ் வழங்கப் போகிறோம் என்று உறுதி அளித்துள்ளனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிப்பு
இதை நம்பி படக்குழுவினர் புரமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வந்தனர். ஆனால் ஜனவரி 5ஆம் தேதி வரை எந்தவித பதிலும் வரவில்லை. அதன்பிறகு நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஜனநாயகன் படம் 500 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்கினால் தான் டிக்கெட் முன்பதிவை தொடங்க முடியும். திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு கொண்டு வர முடியும் என்று நீதிமன்றத்தில் முறையிடுகின்றனர்.
நீதிமன்றத்தில் CBFC தரப்பு முன்வைத்த வாதம்
CBFC சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், எங்களுக்கு சென்சார் வழங்க வேண்டும் யாரும் உத்தரவிட முடியாது. எங்கள் தரப்பிற்கு 20 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது. அதற்குள் படத்தை பார்த்து விட்டு எப்போது வேண்டுமானாலும் சான்றிதழ் வழங்க முடியும். மேலும் ஜனநாயகன் படத்தை பார்ப்பதற்கு புதிதாக குழு ஒன்றை அமைக்கப் போகிறோம் என்று தெரிவிக்கின்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜனவரி 9 தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிடுகின்றனர். ஆனால் அதே நாளில் தான் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
இந்த சூழலில் வேறு வழியின்றி படத்தை ஒத்திவைப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஒருவேளை நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தால், வேறொரு அமர்வில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்திருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இடைப்பட்ட காலத்தில் இல்லாமல் போய்விட்டது.
ஜனநாயகன் சென்சார் வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும்?
CBFC போன்ற மத்திய அரசு அமைப்பிற்கு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்யலாம்.
குறிப்பிட்ட கால நேரத்திற்குள் படத்தை பார்த்துவிட்டு சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கலாம்.
நீதிபதியே தலையிட்டு நான் படத்தை பார்க்கிறேன். அதன்பிறகு தீர்ப்பு வழங்குகிறேன் என்று சொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.