10-ம் வகுப்பு தேர்வில் மாணவிகள் மீண்டும் அசத்தல்... அறிவியலில் 10,476 பேர் சென்டம்.!
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தாண்டும் மாணவியர்கள் தேர்ச்சியில் முன்னிலை பெற்றதுடன், பல்வேறு பாடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் அதிகளவில் முழு மதிப்பெண்கள் பெற்றிருப்பது கல்வித்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை தமிழகம் முழுவதும் நடைபெற்றன. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.31 சதவீதமாக பதிவாகியுள்ளது.
மாணவியர்கள் இந்தாண்டும் மாணவர்களை விட அதிக தேர்ச்சி பெற்று முன்னிலை வகித்துள்ளனர். தேர்வு எழுதிய 4,35,247 மாணவியர்களில் 4,19,891 பேர் தேர்ச்சி பெற்று 96.47 சதவீத தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளனர். அதேசமயம், 4,35,396 மாணவர்களில் 4,01,214 பேர் தேர்ச்சி பெற்று 92.15 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். இதன்மூலம் மாணவர்களை விட மாணவியர்கள் 4.32 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
பாட வாரியான தேர்ச்சி விகிதங்களிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளனர். தமிழ் பாடத்தில் 98.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், ஆங்கிலத்தில் 99.44 சதவீதம் தேர்ச்சி பதிவாகியுள்ளது. கணிதத்தில் 97.36 சதவீதம், அறிவியலில் 97.93 சதவீதம் மற்றும் சமூக அறிவியலில் 98 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தாண்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. தமிழ் பாடத்தில் 34 பேரும், ஆங்கிலத்தில் 92 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3,194 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 10,476 மாணவர்கள் மற்றும் சமூக அறிவியலில் 3,336 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மொத்தமாக ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17,132 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களே 2,774 பேர் இருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ந்து தஞ்சாவூர், திருச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்திலும் சிவகங்கை மாவட்டம் 97.42 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
மாற்றுத் திறனாளி மாணவர்களும் இந்தாண்டு குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 13,292 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 11,416 பேர் தேர்ச்சி பெற்று 85.89 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். மேலும், சிறைவாசிகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். 370 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில் 354 பேர் தேர்ச்சி பெற்று 95.68 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவு செய்துள்ளனர்.
தனித்தேர்வர்களில் 24,353 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், 8,744 பேர் தேர்ச்சி பெற்று 35.91 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றம், மாணவியர்களின் ஆதிக்கம் மற்றும் அறிவியல் பாடத்தில் அதிகளவில் 100 மதிப்பெண்கள் பெற்றிருப்பது முக்கிய அம்சங்களாக கல்வியாளர்களால் பார்க்கப்படுகிறது.