சட்டசபையில் முதல் நாள் பரபரப்பு.. நாளை சபாநாயகர் தேர்தல்..!
தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11, 2026) காலை 9.30 மணிக்கு சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் தொடங்கியது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கருப்பையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் முதலில் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பதவியேற்றனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட திமுக, அதிமுக உறுப்பினர்களும் எம்.எல்.ஏக்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
சில உறுப்பினர்கள் வெற்றிச் சான்றிதழ்களை கொண்டு வராத காரணத்தால் இன்று பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு நாளை மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தற்காலிக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து கூட்டத்தொடர் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. புதிய சட்டமன்றத்தின் முதல் நாளிலேயே ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே அரசியல் பரபரப்பு காணப்பட்ட நிலையில், நாளை நடைபெற உள்ள சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையில், சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஜே.சி.டி. பிரபாகர் எம்.எல்.ஏ மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றவர். பின்னர் தவெகவில் இணைந்த அவர், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சபாநாயகர் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் வேறு வேட்பாளர் நிறுத்தப்பட்டால் சபாநாயகர் தேர்தலில் குரல் வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் யாரையும் முன்மொழியாவிட்டால் ஜே.சி.டி. பிரபாகர் ஒருமனதாக தேர்வு செய்யப்படலாம் என சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் திருச்சி துறையூர் தொகுதியை சேர்ந்த தவெக எம்.எல்.ஏ ரவிசங்கர், துணை சபாநாயகர் பதவிக்காக மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனால் நாளைய சட்டப்பேரவை கூட்டம் அரசியல் ரீதியாக மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.