வாளால் கேக் வெட்டிய எம்.எல்.ஏ: தேர்தல் வெற்றிக்கு பின் சர்ச்சையில் விஜய் தாமு
தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு எதிராக ஆளுங்கட்சியான தி.மு.க கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பல அனுபவம் வாய்ந்த தலைவர்களை தோற்கடித்த த.வெ.க வேட்பாளர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ராயபுரம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்களை, த.வெ.க வேட்பாளர் விஜய் தாமு சுமார் 14,249 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்தத் தோல்வியில் ஜெயக்குமார் தனது டெபாசிட்டையும் இழந்தது அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய விஜய் தாமு, கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர் மன்ற மற்றும் மக்கள் இயக்க பணிகளில் ஈடுபட்டு வந்தவர். கட்சி தொடங்கப்பட்ட பிறகு, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக உயர்ந்த அவர், பலம் வாய்ந்த கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர், மே 5-ஆம் தேதி நடந்த அவரது பிறந்தநாள் விழாவில், தொண்டர்கள் வழங்கிய வாளைக் கொண்டு கேக் வெட்டிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த நேரத்தில், கட்சி நிர்வாகி லயோலா மணி தடுக்க முயன்றும், அதை பொருட்படுத்தாமல் அவர் வாளால் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.