dark_mode
Image
  • Thursday, 21 May 2026

படப்பையில் பரபரப்பு: முன்விரோதத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் வெட்டிக்கொலை. 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது

படப்பையில் பரபரப்பு: முன்விரோதத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் வெட்டிக்கொலை. 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது

படப்பை அருகே கல்லூரி மாணவர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக நடந்த இந்த இரட்டை கொலை வழக்கில், 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படப்பை அருகேயுள்ள வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பரத் (22) மற்றும் சீனு (23) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இருவரும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து வந்தனர். கல்வியுடன் சேர்த்து, துக்க நிகழ்ச்சிகளில் கானா பாடல்கள் பாடியும் வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு, ஒரகடம் பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய பின்னர், இருவரும் நண்பர் லோகேஷின் வீட்டில் தங்குவதற்காக படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் தங்கியிருந்தபோது, கடந்த 17-ம் தேதி நள்ளிரவு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்து பரத் மற்றும் சீனுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த படப்பை போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், இந்தக் கொலைக்கு பின்னணியில் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. முடிச்சூரைச் சேர்ந்த ரவுடி குமரவேல் (20) மற்றும் பரத் இடையே ஏற்கனவே பகைமை இருந்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். குமரவேலை கொலை செய்ய திட்டமிட்ட பரத், குமரவேலுடன் சுற்றித்திரிந்த 16 வயது சிறுவனை தொடர்புகொண்டு, குமரவேல் இருக்கும் இடத்தை காட்ட வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த விவரத்தை அந்த சிறுவன் குமரவேலிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த குமரவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பரத்தை தாக்க திட்டமிட்டதாக போலீஸார் கூறுகின்றனர். அதன்படி, சம்பவத்தன்று பரத் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதை தடுக்க முயன்ற நண்பர் சீனுவும் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக முடிச்சூரைச் சேர்ந்த குமரவேல், வேலன் (19), பல்லாவரத்தைச் சேர்ந்த அய்யப்பன் (26), புதுப்பெருங்களத்தூரைச் சேர்ந்த கலைச்செல்வம் (20), படப்பையைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

related_post