முதல்வராக பொறுப்பேற்ற விஜய்.. முதல் நாளிலேயே அதிரடி முடிவுகள்.. ஒரு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!
தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை பதிவு செய்து, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இதையடுத்து, த.வெ.க தலைவர் விஜய் நேற்று (மே 10) தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
முதல்வராக பொறுப்பேற்ற உடனேயே மக்கள் நலன் சார்ந்த மூன்று முக்கிய திட்டங்களில் விஜய் கையெழுத்திட்டார். தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முதல் அலுவல் கூட்டத்தில் கலந்து கொண்டு, சட்டப்பேரவை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் சமூக நீதி சின்னமாக விளங்கும் பெரியார் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய அவர், அங்கு திரண்டிருந்த பொதுமக்களின் வாழ்த்துக்களையும் பெற்றார். தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியை நேரில் சந்தித்து அவரிடமிருந்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையில், தமிழக சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தொடர முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அதனால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 108-இல் இருந்து 107-ஆக குறைந்துள்ளது.