dark_mode
Image
  • Thursday, 28 May 2026

“ஆய்வு” பெயரில் தவெகவினர் அட்ராசிட்டி? அரசு நிர்வாகத்தில் தலையீடு சர்ச்சை..!

“ஆய்வு” பெயரில் தவெகவினர் அட்ராசிட்டி? அரசு நிர்வாகத்தில் தலையீடு சர்ச்சை..!

தமிழ்நாட்டில் புதிய அரசாக தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்துகள் உள்ளிட்ட இடங்களில் “ஆய்வு” என்ற பெயரில் தலையீடு செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

முதல்வராக விஜய் பதவியேற்றதையடுத்து அமைச்சர்கள் மாவட்ட வாரியாக ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில், சில தவெக நிர்வாகிகளும் தனிப்பட்ட முறையில் அரசு துறைகளில் சென்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவது, எச்சரிக்கை விடுப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தேனி, சங்கரன்கோவில், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில் வார்டுகளுக்குள் அனுமதியின்றி நுழைந்து ஆய்வு நடத்திய சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பின.

மேலும், சென்னை மாநகராட்சி கூட்டத்தில் புகுந்து அதிகாரிகளிடம் மைக் மூலம் அறிவுரை வழங்கியதும், ராணிப்பேட்டையில் தொழில் அதிபர்களிடம் மாமூல் கோரியதாக எழுந்த புகாரும் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் பேருந்து நடத்துநரிடம் அடையாள அட்டை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவங்கள் பலவும் “ரீல்ஸ்” வடிவில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது புதிய அரசியல் கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது.

இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதுவரை தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் கூட அதிகாரப்பூர்வ பதவியின்றி அரசு நிர்வாகத்தில் இவ்வாறு நேரடி தலையீடு செய்யாத நிலையில், தவெக நிர்வாகிகளின் இந்த நடவடிக்கைகள் அரசின் செயல்முறை மற்றும் நிர்வாக ஒழுங்கு குறித்து விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

related_post