விசாரணைக்கு ஆஜராகுவது குறித்து காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்
சென்னை: தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல்துறைக்கு விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "இந்த வழக்கில் எனது பெயரோ, எனது சகோதரர் அசோக்குமார் பெயரோ இடம்பெறவில்லை. அப்படியிருக்கையில், நாங்கள் எந்த அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "நான் எங்கும் தலைமறைவாகவோ அல்லது விசாரணையைத் தவிர்க்கும் நோக்கத்திலோ இல்லை. சட்டப்படி தேவையான நடைமுறைகளைப் பின்பற்றியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விசாரணைக்கு ஆஜராகும் சூழலில், வேறு எந்த வழக்கிலும் தம்மைக் கைது செய்யக் கூடாது என்றும், சட்டத்தின் தொடர்புடைய பிரிவின்படி (BNS பிரிவு 35(3) தொடர்பான நடைமுறைகளுக்கு இணங்க) உரிய நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் ஒரு மக்கள் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபராகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள செந்தில் பாலாஜி, சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.