dark_mode
Image
  • Friday, 04 September 2026

பழனி மட நிலத்தின் முறைகேடு பத்திரப்பதிவு ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பழனி மட நிலத்தின் முறைகேடு பத்திரப்பதிவு ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

நிலம் தொடர்பான நிலுவை வழக்குகள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் கருத்து ஆகியவை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படாமல், தனி நீதிபதியிடம் உத்தரவு பெறப்பட்டதாகக் கூறி, கோயில் நிர்வாகம் மேல்முறையீடு செய்திருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்காததும், முழுமையான தகவல்களை மறைத்தும் உத்தரவு பெறப்பட்டதாகக் குறிப்பிட்டு, அந்த உத்தரவையும் அதன் அடிப்படையில் செய்யப்பட்ட பத்திரப்பதிவையும் செல்லாது என அறிவித்தனர்.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சார் பதிவாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, துறை ரீதியான மற்றும் குற்றவியல் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோயில் சொத்துகளை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

related_post