dark_mode
Image
  • Monday, 20 April 2026

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 23 பேர் உயிரிழப்பு – விதிமீறல் காரணமா.?

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 23 பேர் உயிரிழப்பு – விதிமீறல் காரணமா.?

விருதுநகர் அருகே நடந்த இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான ‘வனஜா’ பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட வெடிப்பால் ஆலையின் பல கட்டடங்கள் சிதறி நொறுங்கியதுடன், அதன் அதிர்வு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியிலும், சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோதே மீண்டும் சில வெடிப்புகள் ஏற்பட்டதால் சூழல் மேலும் பதற்றமாகியது. இதில் 5 போலீஸ்காரர்கள், 3 தீயணைப்பு வீரர்கள் மற்றும் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அளித்த விளக்கத்தில், உயிரிழந்தவர்களில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் 16 பேர் பெண்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 6 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் லைசென்ஸ் இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை வேலை நடைபெறக்கூடாது என்ற பாதுகாப்பு விதி மீறப்பட்டுள்ளதாகவும், இதுவே விபத்திற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளதால், பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. எஸ்ஓபி (SOP) அடிப்படையில் அனுமதிகள் வழங்கப்பட்டாலும், அவற்றின் மீறல்கள் தொடர்ச்சியாக கவலைக்கிடமான விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன.

இந்த விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

 

related_post