மத்திய அரசு விளக்கம் : கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

கொரோனா தடுப்பூசி போடுவதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுவதற்கு எந்தவொரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்படும் எந்த தடுப்பூசியும் ஆண்மையையும், பெண்களின் கருவுறும் தன்மையையும் பாதிக்காது என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தது முதல் பல்வேறு சர்ச்சைகளும், தவறான தகவல்களும், வதந்திகளும் சமூகவலைதளத்தில் பரவிவருகின்றன.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆண், பெண் ஆகிய இருவருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படுவதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கத்தை அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு, பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மலட்டுத் தன்மை ஏற்பட்டதாக ஒரு புகாரும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்பு, அறிவியல்பூர்வமான சோதனைகள் செய்யப்பட்டு, விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு, குறிப்பிட்ட சில மனிதர்களுக்கு சோதனைக்காக செலுத்தப்பட்டு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என தெரிந்த பிறகே மக்களுக்கு செலுத்த அனுமதியளிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்களும், புதிதாக திருமணம் முடித்தவர்களும் அச்சம்கொள்ளாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
நோய் எதிர்ப்புசக்தியின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா கூறும்போது, போலியோ தடுப்பூசி அறிமுகம் செய்யும்போதும், வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் இதைபோன்று வதந்திகள் பரப்பப்பட்டன என தெரிவித்தார். குறிப்பாக போலியோ தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஆண்மை தன்மையை இழக்க நேரிடும், பெண்கள் கருவுறும் தன்மையை இழப்பார்கள் என்றே வதந்தி பரவியதாக அவர் தெரிவித்தார். ஆனால் இன்று தடுப்பூசியின் மூலம் இந்தியா போலியோவை முழுமையாக ஒழித்த நாடாக மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description