புதிய சட்டம் மூலம் மன்னர்கள் காலத்துக்கு செல்கிறோம்: ராகுல்

கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருக்கும் முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படும் சட்டமசோதா குறித்து லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது; பாஜ முன்மொழியும் புதிய சட்டத்தின் மூலம், நாம் இடைக்காலத்திற்கு (15ம் நூற்றாண்டு காலகட்டம்) திரும்பிச் செல்கிறோம். அப்போது, மன்னர்கள் தங்களின் விருப்பப்படி யாரையும் நீக்க முடியும். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு எந்த அர்த்தமும் இல்லை. உங்கள் முகம் அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அமலாக்கத்துறையிடம் ஒரு வழக்கை போடச் சொல்கிறார். பின்னர் ஒரு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் அழிக்கப்படுகிறார்.
மேலும், நாம் ஏன் ஒரு புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. துணை ஜனாதிபதி ஏன் ராஜினாமா செய்தார் என்பது பற்றி ஒரு பெரிய கதை உள்ளது. உங்களில் சிலருக்கு இது தெரிந்திருக்கலாம். சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதேபோல, தற்போது, அவர் ஒளிந்து கொண்டிருப்பற்கு பின்பும் ஒரு கதை உள்ளது. துணை ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்? ராஜ்யசபாவில் பல சவால்களை எதிர்கொண்ட அவர் திடீரென மவுனமாகிவிட்டார். இதுதான் நாம் வாழும் காலம்.
பீஹாரில் ஒரு நெருப்பு பற்றி எரிவதை நான் காண்கிறேன். அந்த தீயை நிறுத்த முடியாது என்பதால், அனைத்து மூத்த தலைவர்களையும் , இந்த நெருப்பை காண நான் அழைக்கிறேன். பீஹாரில் ஒரு 4 வயது குழந்தை 'ஓட்டு திருட்டு ஓட்டு திருட்டு' என்று கோஷமிடுகிறது. அவர்கள் மஹாராஷ்டிரா, ஹரியானாவை (தேர்தல்கள்) திருடி விட்டனர். அவர்கள் பீஹார், மேற்கு வங்கம் மற்றும் அசாம் தேர்தல்களையும் திருடுவார்கள். ஆனால், இப்போது அந்த நெருப்பு பீஹாரில் பரவியுள்ளது, இவ்வாறு கூறினார்