பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! 1,200 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!!
வாரத்தின் தொடக்கநாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் முதல்முறையாக 85,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,208.76 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், வர்த்தக நேர முடிவில் 1,272.07 புள்ளிகள் குறைந்து 84,299.78 என்ற புள்ளிகளில் நிறைவுற்றது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி,முடிவில் 368.10 புள்ளிகள் குறைந்து 25,810.85 புள்ளிகளில் வர்த்தகமானது.
கடந்த வாரம் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைத்த நிலையில் இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் அதிக சரிவை சந்தித்தன. பாரதி ஏர்டெல், எம்&எம், எஸ்பிஐ, டிசிஎஸ், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலையும் குறைந்தன.
பொதுவாக ஆட்டோமொபைல், நிதிச் சேவை நிறுவனங்கள், ஐ.டி., மீடியா, ரியாலிட்டி, ஹெல்த்கேர், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகள் 1.6% வரை சரிந்தன.
அதேநேரத்தில் நிஃப்டி உலோகத் துறை 1.5% அதிகரித்தது. சீனா பொருளாதாரத்தைத் தூண்டுவது குறித்து அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து என்எம்டிசி, ஹிண்டால்கோ, செயில்(SAIL) ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் கண்டன.