ஆபரண தங்கம் விலையில் புது உச்சம்: ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது
சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய வரலாறு படைத்தது. ஒரு சவரன், 1,00,120 ரூபாய் ஆக விற்பனை ஆகிறது. இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,160 உயர்ந்தது.
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்ததால், நம் நாட்டிலும் அதன் விலை புதிய உச்சங்களை எட்டி வந்தது. தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம், சவரன் விலை, கடந்த அக்டோபரிலேயே, 95,000 ரூபாயை எட்டியது.
அம்மாதம், 21ம் தேதி தங்கம் சவரன், 97,600 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. பின், தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தாலும், உச்சத்தை எட்டவில்லை. கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வெள்ளி கிழமை (டிசம்பர் 12) காலை தங்கம் கிராமுக்கு, 200 ரூபாய் உயர்ந்து, 12,250 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. சவரனுக்கு, 1,600 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 98,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மாலை மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 12,370 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 960 ரூபாய் அதிகரித்து, 98,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று (டிச 14) ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (டிச.,15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,460க்கு விற்பனை ஆனது.
ஆனால், மதியம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,120 ஐ தாண்டியது. ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515 க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் மீண்டும் ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்தது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெள்ளி விலை கிராமுக்கு இன்று ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறைய வாய்ப்பில்லை
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: சர்வதேச முதலீட்டாளர்களின் பெரும்பாலான முதலீடுகள், தங்கமாகவே உள்ளது. இது போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்து, நம் நாட்டிலும், அதன் விலை அதிகரித்து வருகிறது.
வெள்ளியிலும் அதிக முதலீடுகள் குவிந்து வருவதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.