dark_mode
Image
  • Tuesday, 07 October 2025

ஜிஎஸ்டி 2.0 வந்தாச்சு… உங்க சம்பளத்தில் எவ்வளவு சேமிக்கலாம்? FMCG பொருட்கள் முதல் கார்கள் வரை!

ஜிஎஸ்டி 2.0 வந்தாச்சு… உங்க சம்பளத்தில் எவ்வளவு சேமிக்கலாம்? FMCG பொருட்கள் முதல் கார்கள் வரை!

நாடு முழுவதும் இன்று ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி மீது வியாபாரிகள் பலரும் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். இது மிகவும் சிக்கலானது என்றும், இத்தகைய வரி விதிப்பின் மூலம் தொழில்கள் முடங்கும் என்றும் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து ஜிஎஸ்டி வரி விதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி 2.0 என்ற பெயரில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் இன்று முதல் அமல்

இது நாடு முழுவதும் இன்றைய தினம் (செப்டம்பர் 22) பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி, பெரும்பாலான பொருட்கள் 5% மற்றும் 18% வரம்பிற்குள் வந்துள்ளன. அல்ட்ரா சொகுசு பொருட்களுக்கு மட்டும் பிரத்யேகமாக 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான பொருட்களின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் செலவிடும் தொகை குறையும். சேமிப்பை அதிகப்படுத்த வாய்ப்பு ஏற்படும்.

தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள்:

  • கழிவறை பயன்பாட்டு பொருட்கள் அனைத்திற்கும் 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது.
  • பவுடர், ஷேவிங் கிரீம், லோஷன் உள்ளிட்டவை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • பால் பொருட்களின் விலை 40 முதல் 70 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. வெண்ணை 100 கிராம் பாக்கெட்டில் 4 ரூபாய், பன்னீர் 200 கிராம் பாக்கெட்டிற்கு 4 ரூபாய் சரிந்துள்ளது.
  • பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களை எடுத்துக் கொண்டால் 4 ரூபாய் குறைந்துள்ளது. சாக்லேட்களில் பிரீமியம் வகை 50 ரூபாயும், உயர்தர பாக்ஸ் சாக்லேட்கள் 100 ரூபாயும் குறைந்துள்ளது.
  • பழச்சாறு 5 முதல் 10 ரூபாய், காஃபி பேக்குகள் 30 முதல் 95 ரூபாய், பாட்டில் தண்ணீர் 2 ரூபாய் என விலை குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • அல்ட்ரா உயர் வெப்பநிலை பாக்கெட் பால்கள், பேக் செய்யப்பட்ட பன்னீர், சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட அனைத்து வகை இந்திய பிரட்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்:

  • ஸ்பிலிட் ஏசிக்கள் 2,800 முதல் 5,900 ரூபாய் வரை குறைகிறது. விண்டோ யூனிட்கள் 3,400 ரூபாய் வரை சரிந்துள்ளது.
  • டிஷ் வாஷர்கள் 8,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. எண்ட்ரி லெவல் மாடல்களுக்கு சுமார் 4,000 ரூபாய் வரை ஜிஎஸ்டி முலம் விலை குறைக்கப்பட்டுள்ளது.
  • டிவிக்கள் சைஸிற்கு ஏற்றவாறு 2,500 ரூபாய் முதல் 85,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல்ஸ் வாகனங்களுக்கு வரிச்சலுகை

  • 350 சிசி எஞ்சின்கள் வரையிலான மோட்டார் சைக்கிள்களுக்கு 18 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.
  • பட்ஜெட் மாடல் கார்கள் 40,000 முதல் 75,000 ரூபாய் விலை குறைந்துள்ளது. நடுத்தர வகை செடான் கார்கள் 57,000 முதல் 80,000 வரை விலை சரிந்திருக்கிறது. காம்பேக்ட் எஸ்.யூ.வி கார்கள் 68,000 முதல் 85,000 ரூபாய் விலை குறைந்துள்ளது.
  • ஸ்கூட்டர்கள் 5,600 முதல் 18,800 ரூபாய் வரை விலை குறைப்பை பெற்றுள்ளது.

இதுதவிர 7,500 ரூபாய் வாடகைக்கு கீழ் உள்ள ஓட்டல் அறைகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளதால் 500 ரூபாய்க்கு மேல் கட்டணம் குறையும் எனக் கூறியுள்ளனர்.