ட்ரம்ப் - புதின் அலாஸ்கா சந்திப்பு : 3 மணி நேர பேச்சுவார்த்தை முடிவில் நடந்தது என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் ஏற்படவில்லை. அடுத்த முறையில் ரஷ்யாவில் சந்திப்பு நடக்கலாம் என்று புதின் தெரிவித்தார்.
ரஷ்யாவை ஒட்டி அமைந்துள்ள உக்ரைன் நாடு, ரஷ்யாவின் தலைமையிலான சோவியத் யூனியனில் அங்கம் வகித்தது. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டபோது உக்ரைன் தனி நாடாக உருவெடுத்தது. உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நோட்டோ ராணுவக் கூட்டமைப்பில் சேருவதற்கு விரும்பியது. தனது அண்டை நாடான உக்ரைன் அமெரிக்காவுடன் இணைவது தங்களுக்கு ஆபத்து என்பதால் இந்த நடவடிக்கையை ரஷ்யா விரும்பவில்லை. ஆனாலும், உக்ரைன் தனது முடிவை கைவிடாததால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைனுக்கு எதிராக போரை அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்தன. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவர் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ட்ரம்புக்கும், உக்ரைன் அதிபர் ஜெலான்ஸ்கிக்கும் வாக்குவாதம் ஏற்பட, ஜெலான்ஸ்கி வெளிநடப்பு செய்தார். அதே சமயம் ட்ரம்ப் தற்போது மீண்டும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் இன்று நேரில் சந்தித்துப் பேசினர். மூடிய அறையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின் முடிவில், இரு தலைவர்களும் ஊடகங்களை சந்தித்தனர். அப்போது, அமெரிக்கா - ரஷ்யா இடையிலான உறவு மற்றும் உக்ரைன் போர் பற்றி பேசினர். இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தாலும், கவனத்துடன் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர். சந்திப்பின்போது எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை.
பொதுவாக அமெரிக்க அதிபரே வெளிநாட்டு தலைவர்களை வரவேற்று முதலில் பேசுவார். ஆனால் இந்த முறை புடின் முதலில் பேசினார். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு மோசமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பனிப்போர் காலத்திற்கு பிறகு உறவு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என்றும், பேச்சுவார்த்தை மூலம் உறவை சரி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பு மிகவும் தாமதமானது என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்டகால வரலாறு உண்டு, டிரம்ப் தனது நாட்டின் நலனில் அக்கறை கொண்டுள்ளார். அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு அதன் சொந்த நலன்கள் உள்ளன என்பதை அவர் புரிந்துகொள்கிறார்" என்று புடின் கூறினார்.
அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. சந்திப்பின் முடிவில் "அடுத்த முறை மாஸ்கோவில் சந்திக்கலாம்" என்று புதின் கூறினார். அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவில் அடுத்த சந்திப்பு நடக்கலாம் என்பதை அவர் சூசகமாக தெரிவித்தார். உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு புடினுக்கு ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் அமைதியை விரும்பும் உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.