dark_mode
Image
  • Friday, 25 July 2025

பிறப்பால் குடியுரிமை பெறும் விவகாரம்; டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிப்பு

பிறப்பால் குடியுரிமை பெறும் விவகாரம்; டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்ற டிரம்ப்பின் அறிவிப்பை பெடரல் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் தாய் அல்லது தந்தையின் குடியுரிமை எந்த நிலையில் இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில், 14வது திருத்தம் இந்த உரிமையை வழங்குகிறது. ஆனால், இதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப் படாது.

அதுபோல, தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மொத்தமுள்ள, 50 மாகாணங்களில், 22 மாகாணங்கள், இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.

இந்நிலையில், அமெரிக்காவில் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்ற டிரம்ப்பின் அறிவிப்பை பெடரல் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசியலமைப்புக்கு எதிரான அறிவிப்பு என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இது டிரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பெடரல் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது.

related_post