dark_mode
Image
  • Sunday, 10 August 2025

ஆசியாவில் பனிப்போர் காலத்து உறவுக்கு அச்சாரம் போட்டுள்ள டிரம்ப்

ஆசியாவில் பனிப்போர் காலத்து உறவுக்கு அச்சாரம் போட்டுள்ள டிரம்ப்

இ ந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அண்மையில் தடாலடியாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நம் இரு நாடுகளின் ராணுவ உறவுகளையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக, அமெரிக்கா - -பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு உறவுகள் மேம் படுவதாக அறிவித்ததன் மூலம், இந்த பிராந்தியத்தில் மீண்டும், பனிப்போர் காலத்திய முக்கோண உறவை புதுப்பிப்பதற்கு அச்சாரம் போட்டுள்ளார்.

 

பனிப்போர் காலம் எனப்படும் 1947 முதல் 1991 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானிற்கு அமெரிக்கா கொம்பு சீவியது. இதன் காரணமாகவே, இந்தியாவுடன் பேச்சுக்களை துவக்கும் போதோ அல்லது உறவை புதுப்பிக்கும் போதோ, பாகிஸ்தானின் கருத்திற்கு மட்டுமே மதிப்பு கொடுத்தது.

இந்தியா- - அமெரிக்கா உறவுகளில் அழையா விருந்தாளியாக பாகிஸ்தான் எப்போதுமே இருந்து வந்தது.

ஆனால், பனிப்போருக்கு பின் இந்த நிலை மாற துவங்கியது. குறிப்பாக, அமெரிக்காவில் இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாய் இருந்த ஒசாமா பின் லேடனை பாகிஸ்தான் ஒளித்து வைத்ததில் துவங்கி, அமெரிக்காவின் அணுகுமுறை மாற துவங்கியது.

பாகிஸ்தானின் மானம் தற்போது திடுதிப்பென்று அதிபர் டிரம்ப், பாகிஸ்தானுடனான உறவை புதுப்பித்திருப்பதாக அறிவித்தது, அமெரிக்கா நம் நா ட்டின் முதுகில் குத்தியதற்கு சமம். இந்த விவகாரத்தில் நம் இரு நாடு உறவுகள் சீரடைவதற்கு பல காலம் பிடிக்கும். 'ஆப்பரேஷன் சிந்துாரை' தானே நிறுத்தியதாக, டிரம்ப் தொடர்ந்து மார்தட்டி வருவதற்கு பின்னணியிலும், பாகிஸ்தானே இருப்பதாக கருத வேண்டி உள்ளது.

பாகிஸ்தான் கோரியதால் தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டதாக நம் அரசு அறிவித்ததற்கு மாறாக டிரம்ப் கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அவர் பாகிஸ்தானின் மானத்தை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

சொல்லாமல் விட்டது இரண்டில் சொல்லாமல் விட்டதே அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆப்பரேஷன் சிந்துாரை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சீனா எவ்வாறெல்லாம் போர் விமானங்களையும், ஏவுகணைகளையும் அளித்து வந்துள்ளது என்பதை, நம் அரசு பட்டியல் போடாத குறையாக வெளியிட்டது.

இப்போது பாகிஸ்தானுடன் அமெரிக்கா கொஞ்சி குலாவுவதன் காரணமாக, அந்த நாடு சீனாவை பகைத்துக் கொள்ளும் என்று யாரும் கருத முடியாது. பாகிஸ்தான்- - சீனா உறவுகள் வலுப்படும் அதே வேளை, அந்த நாட்டுடன் அமெரிக்காவும் கைகோர்க்கப் போகிறது.

நம் நாட்டை பொறுத்தவரையில், பனிப்போர் காலத்திய பிராந்திய அரசியலும் காய் நகர்த்தல்களும் மீண்டும் துவங்க வாய்ப்புள்ளது.

செயலற்ற பொருளாதாரம் இந்த பின்னணியில், டிரம்ப் தெளிவாக சொல்லிச் சென்ற விஷயம் நமக்கு முக்கியமாகிறது.

அமெரிக்காவின் உறவை புதுப்பித்ததன் மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரம் முன்னேறப் போகிறது என்று கொக்கரிக்கும் அதே நேரத்தில், அதிபர் டிரம்ப் நம் நாட்டை அவமதிப்பதற்காகவே, தன் அறிக்கையில் மற்றுமொரு கருத்தை தெரிவித்துள்ளார். 'நமது நாட்டின் பொருளாதாரம் செயலற்றது' என்பதே அது.

அதோடும் விட்டுவிடவில்லை. இந்தியாவை போன்றே ரஷ்யாவின் பொருளாதாரமும் செயலிழந்து விட்டது. இருவரும் சேர்ந்து மூழ்க போகின்றனர் என்று மிகவும் கேவலமாக பேசியிருக்கிறார். இது நம் இறையாண்மைக்கும், நன்மதிப்பிற்கும், ஏன் ஒவ்வொரு இந்தியரின் நாட்டுப்பற்றுக்கும் விடப்பட்ட சவால்.

இதன் மூலம், அமெரிக்க அதிபர் பனிப்போர் காலத்திய சர்வதேச உறவுகள் குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பி உள்ளார்.

கள்ள மவுனம் நம் நாட்டில் பொது மக்களின் கருத்து, 1971-ம் ஆண்டு வங்கதேச போர் துவங்கி, ரஷ்யாவிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவிற்கு எதிராகவுமே இருந்து வந்துள்ளது. அதற்கு காரணமும் இருந்தது. இடைப்பட்ட காலத்தில், அதில் சிறிது மாற்றம் தோன்றியது. தற்போது, அமெரிக்க அதிபர் கூற்றின் தாக்கம் அடிமட்டம் வரை சென்றடையும் போது, பழைய எண்ணமே திரும்பும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை குறித்த இந்த பிரச்னைகளுக்கு பதில் சொல்லாமல், டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பு குறித்து மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும், அதிகாரிகளும் கருத்து தெரிவித்து வருவது ஏன்? அவர்களின் கள்ள மவுனத்திற்கு காரணம் தான் என்ன? அதன் அர்த்தம் தான் என்ன?

related_post