அடுத்த 24 மணி நேரத்தில் பாருங்க... உருட்டிப் பார்க்கிறார் டிரம்ப்

நியூயார்க்: 'இந்தியா மீதான வரி விதிப்பை, அடுத்த 24 மணி நேரத்தில் கணிசமாக அதிகரிப்பேன்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தான்தோன்றித்தனமாக பேசக்கூடியவர்; அவரது கிறுக்குத்தனமான செயல்பாடுகளால், நட்பு நாடுகள் அனைத்தும் பகை நாடுகளாக மாறி விட்டன. நேட்டோ கூட்டமைப்பு நாடுகள், 'அமெரிக்காவை ஏன் தான் கூட்டணியில் வைத்திருக்கிறோமோ' என்று சலித்துக் கொள்ளும் அளவுக்கு டிரம்ப் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் முயற்சித்தார். இதற்கு ரஷ்ய அதிபர் புடின் சம்மதிக்கவில்லை. அவருடன் நேருக்கு நேர் மோத முடியாத டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது பாயத் தொடங்கியிருக்கிறார்.
இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக 2 நாட்களுக்கு முன் கூறியிருந்தார். அதற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்திருந்தது. அமெரிக்க அரசின் நிலைப்பாடு நியாயமற்றது என்று வெளியுறவுத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று டிரம்ப் கூறியதாவது:இந்தியா பற்றி மற்ற அனைவரும் சொல்ல விரும்பாத விஷயம் இதுதான். அந்த நாடு அதிகமாக வரி விதிக்கிறது. அமெரிக்கா அவர்களுடன் மிகக் குறைவான வர்த்தகமே செய்கிறது. இந்தியா ஒரு சிறந்த வர்த்தக கூட்டாளி கிடையாது. அவர்கள் நம்முடன் நிறைய வர்த்தகம் செய்கிறார்கள்.
நாம் அவர்களுடன் வர்த்தகம் செய்வதில்லை. எனவே நாம் அவர்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தோம். அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் மீதான வரி விதிப்பை கணிசமாக அதிகரிக்கப்போகிறேன். ஏனெனில், அவர்கள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறார்கள்.இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அதிபர் டிரம்பின் உருட்டல் மிரட்டல்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.